அரசு கெஜட்டில் உங்கள் பெயரை மாற்றம் செய்ய வேண்டுமா?
அரசு அச்சகத்துறைதான் பெயரை மாற்றுவதற்கான தகுதி பெற்ற அலுவலகம். இதன் அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் எல். ஐ. சிக்கு முன்பு அதாவது ஹிக்கின் பாதம்ஸுக்கு அருகில் உள்ளது. சென்னை அலுவலகத்தில் மட்டுமே உங்களது பெயரை மாற்றம் செய்ய இயலும். பெயர் மாற்றத்திற்கான படிவத்தை நீங்கள் அச்சகத்துறை அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும் விண்ணப்பதாரர் மைனராக இருந்தால் வாரிசுதாரர் அல்லது பாதுகாவலர் கையொப்பம் இடலாம். தமிழ்நாடு அரசின் 'அ' மற்றும் 'ஆ' அலுவலர்கள் அல்லது நோட்டரி பப்ளிக் அல்லது மத்திய அரசு அலுவலர்களிடம் சாட்சியம் பெற வேண்டும். பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும். பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். பெயர் மாற்றக் கட்டணம் 09.02.2004 முதல் ரூ. 415 மட்டுமே. பணத்தை நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ செலுத்தலாம். தபால் மூலம் செலுத்தும் போது, உதவி இயக்குநர் (வெளியீடுகள்) எழுது பொருள் அச்சகத்துறை ஆணையரகம், சென்னை - 600002 என்ற பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையை அனுப்பலாம். காலை 10 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 3 மணி வரை அலுவலகம் இயங்கும். விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து பயன்படுத்த இயலாது. இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து அல்லது நேரிடையாக வாங்கி மட்டுமே பூர்த்தி செய்து தர வேண்டும். அதுபோன்று காசோலை மற்றும் அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் தங்கள் முகவரியை தெளிவாக எழுத வேண்டும். பிறந்த மாவட்டத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும். முதலெழுத்துக்கும் பெயருக்கும் அமைய வேண்டிய புள்ளிகளை கூட சரியாக குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் பழைய பெயரில் கையொப்பம் இட வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் பதிவு பெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாக பெற்று இணைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வசிப்பவர்கள் பெயர் மாற்றம் செய்ய ஆதாரமாக, பழைய பெயருக்கு உண்டான கல்வி சான்றிதழ், வீட்டு விலாசத்திற்கு ஆதாரமாக ரேசன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகலை இணைக்க வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வசித்தால் வசிப்பதற்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். சுவீகாரம் எடுத்துக் கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் பத்திர பதிவு துறையால் பதியப்பட்ட சுவீகார பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும். மேலும் சுவீகாரம் செய்பவரின் கையொப்பமும் அவசியம். விவாகாரத்து செய்து அதனால் பெயர் மாற்றம் செய்தால் நீதிமன்ற தீர்ப்பின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
Team Daniel & Daniel
9840802218
Team Daniel & Daniel
9840802218
Comments
Post a Comment