இலவச வீட்டு மனை
பொது உபயோகத்திற்கு தேவைப்படாத அரசு நிலங்களை வீடு இல்லாதவர்களுக்கு நிலமாக தருவது தான் வீட்டு மனை நில ஒப்படை ஆகும். வீட்டு மனைக்கான விண்ணப்பங்களை தாசில்தாரிடம் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண் உறுப்பினர்களின் பெயரில் தான் வீட்டு மனை நில ஒப்படை வழங்கப்படும். வீட்டு மனை ஒப்படை வருவாய் நிலை ஆணை எண் 21ன் கீழ் வழங்கப்படுகிறது. முதலில் வீட்டு மனை இல்லாதவர்களை அரசு கிராம வாரியாக பிரித்துக் கொள்கிறது. வீட்டு மனை கேட்டு வரும் மனுக்களின் தகுதி அரசால் ஆராயப்பட்டு விதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் படுகிறது. ஆட்சேபனையற்ற அரசு நிலங்களே அரசால் தேர்வு செய்யப்படுகிறது. தகுதியான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை நில அளவையர் மூலம் ப்ளாட்டுகளாக பிரிக்கப்பட்டு கற்கள் நடப்படுகிறது. யாருக்கு முன்னுரிமை :- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தற்போதைய ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 30,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ. 50,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் நில ஒப்படை வழங்கப்படும். மேலும் வீட்டு மனை கோரும் நபர்களுக்கு வேறு வீட்டு மனைகளோ அல்லது வீடுகளோ இருக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனை ஆகும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 சென்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 1/2 சென்டும், கிராமப்புறங்களில் 3 சென்டும் அல்லது அதற்கு குறைவாகவும் நில ஒப்படை செய்யலாம். இது அதிகாரிகளின் முடிவை பொறுத்தது. அரசின் நிலங்களை இலவசமாக வாங்குபவர்களுக்கு 31.05.2000ன் படி குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களுக்கு ரூ. 16,000/- நகரங்களுக்கு ரூ. 24,000/- என அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நில ஒப்படை அளவுகள் ஒரு சிறப்பு திட்டம் மூலமாக திருத்தப்பட்டு கிராமம் - 4 சென்ட், நகரம் - 2 1/2 சென்ட், மாநகரம் - 2 சென்ட் வரை வழங்கப்படும் என 2014ம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புறம்போக்கு நிலம் :- நபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலம் அரசுக்கு தேவைப்படாத போது, ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை வரன்முறை செய்து அந்த நபருக்கே அரசு தந்துவிடலாம். முன்பெல்லாம் 10 ஆண்டுகள் புறம்போக்கு இடத்தை அனுபவித்திருக்க வேண்டும் என அரசு ஆணை இருந்தது. பிறகு இது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு தற்போது 3 ஆண்டுகள் குடியிருந்த ஆதாரங்களை சமர்பித்தாலே போதும் என அரசு ஆணை எண் - 43, 2010ம் ஆண்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த 3 ஆண்டு கால அளவு தொடர்பாக ஒரு வழக்கு சிவகாசி வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் " இந்த வழக்கு முடியும் வரை குடியிருப்பு கால வரம்பை 5 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகள் என குறைக்கப்பட்டதை செயல்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது கால வரம்பு என்பது 5 ஆண்டுகள் தான்.
Comments
Post a Comment